பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்


பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 23 April 2018 5:33 AM IST (Updated: 23 April 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

சாகர் தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்.

பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. பேளூர் கோபாலகிருஷ்ணா. இவர் சாகர் தொகுதியில் டிக்கெட் வழங்குமாறு பா.ஜனதா தலைமையிடம் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் முன்னாள் மந்திரி ஹாலப்பாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

இதனால் பேளூர் கோபாலகிருஷ்ணா கடும் அதிருப்தி அடைந்தார். அவர் எடியூரப்பா மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். சாகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பேளூர் கோபாலகிருஷ்ணா நேற்று முன்தினம் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் பேளூர் கோபாலகிருஷ்ணா காங்கிரசில் சேர்ந்தார். தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “பேளூர் கோபாலகிருஷ்ணா எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரசில் சேர்ந்துள்ளார். காங்கிரஸ் கொள்கையை ஏற்று அவர் கட்சிக்கு வந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேளூர் கோபாலகிருஷ்ணா நிருபர்களிடம் கூறும்போது, “பா.ஜனதாவில் என்னை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் நடந்து கொண்டனர். அதனால் நான் அந்த கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளேன். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன். சாகர் தொகுதியில் எனது மாமா காகோடு திம்மப்பாவுக்கு ஆதரவாக பணியாற்றி வெற்றி பெற வைப்பேன்“ என்றார். 

Next Story