உட்கட்சி போராட்டம் காங்கிரசின் வெற்றியை உணர்த்துகிறது வீரப்பமொய்லி எம்.பி. பேட்டி


உட்கட்சி போராட்டம் காங்கிரசின் வெற்றியை உணர்த்துகிறது வீரப்பமொய்லி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 5:36 AM IST (Updated: 23 April 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

உட்கட்சி போராட்டம் காங்கிரசின் வெற்றியை உணர்த்துகிறது என்று வீரப்பமொய்லி எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எந்த உட்கட்சி பிரச்சினையும் இல்லை. அவ்வாறு பிரச்சினை நிலவுவதாக கூறுவது தவறு. கர்நாடக காங்கிரசில் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். சித்தராமையா அரசியல், சமூக, பொருளாதார நிலைத்தன்மையை கொண்டு வந்துள்ளார். இது பாராட்டத்தக்கது ஆகும்.

கட்சியில் டிக்கெட் கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையோடு பலர் இருந்தனர். அதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த போராட்டம் நடத்தினர். ஆனால் கடைசியில் அவர்கள் அனைவரும் கட்சியின் உண்மை நிலையை புரிந்து அமைதி ஆகிவிட்டனர். கர்நாடகத்தில் உட்கட்சி போராட்டம் காங்கிரசின் வெற்றியை உணர்த்துவதாக உள்ளது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. கர்நாடகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு சித்தராமையா மட்டுமே 5 ஆண்டு பதவி காலத்தில் ஒரு நிலையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார். இந்த 5 ஆண்டுகளும் உட்கட்சி பிரச்சினை எழவில்லை. வரும் காலத்திலும் காங்கிரசில் உட்கட்சி பிரச்சினை வர வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 4 பேர் முக்கிய தலைவர்களாக உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பது சகஜமானது. இது காங்கிரசுக்கு நல்ல விஷயம் ஆகும். தேர்தல் அறிக்கையை தயாரித்து முதல்-மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோரிடம் தாக்கல் செய்துவிட்டோம். இந்த தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் காங்கிரசுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கும். அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவதற்கு முன்னோட்டமாக அமையும். சித்தராமையா அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டது. அதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க ஒரு பெரிய கூட்டணியை அமைக்க வேண்டியது அவசியம். பா.ஜனதா போன்ற மதவாத கட்சியை வீழ்த்த மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். மோடியை விட தான் சிறந்த தலைவர் என்பதை ராகுல் காந்தி நிரூபிப்பார். மற்ற கட்சிகளும் இதை உணர்வார்கள்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார். 

Next Story