கோழிப்பண்ணையில் பயங்கர தீ


கோழிப்பண்ணையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 23 April 2018 6:19 AM IST (Updated: 23 April 2018 6:19 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வேடசந்தூர், 

வேடசந்தூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்சாமி. அவருடைய மகன் தம்பித்துரை. இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியில் உள்ளது. அதை கவனிக்க ஆட்கள் இல்லாததால் தற்போது கோழிகள் வளர்க்கப்படுவதில்லை. இதனால் அங்கு கோழித்தீவனம் மற்றும் பொருட்கள் மட்டுமே இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கோழிப்பண்ணை கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் கோழிப்பண்ணை முற்றிலும் எரிந்து நாசமானது. கோழிப்பண்ணைக்கு அருகே உள்ள தோட்டத்தில் ஒருவர், காய்ந்த செடிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தீ கோழிப்பண்ணைக்கும் பரவியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story