உப்பனாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் உப்பனாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் முதுநகர் ஏணிக்காரன்தோட்டம் பகுதி வாழ் மக்களுக்கான சுடுகாடு சோனங்குப்பத்தில் உள்ளது. ஏணிக்காரன் தோட்டத்துக்கும் சோனங்குப்பத்துக்கும் இடையே உப்பனாறு ஓடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமானால், படகில் பிணத்தை ஏற்றிக்கொண்டு உப்பனாற்றின் ஒருகரையில் இருந்து மறுகரைக்கு செல்ல வேண்டியுள்ளது.
மழைகாலங்களில் உப்பனாற்றை கடந்து செல்வது பெரும் சிரமமாக இருப்பதால், உப்பனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று ஏணிக்காரன்தோட்டத்தைச்சேர்ந்த பொதுமக்கள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் எம்.சி.சம்பத்,, கலெக்டர் தண்டபாணி ஆகியோர் நேற்று முன்தினம் ஏணிக்காரன்தோட்டத்துக்கு சென்று உப்பனாற்றை பார்வையிட்டனர். அப்போது உப்பனாற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் தண்டபாணிக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஏணிக்காரன்தோட்டம் உப்பனாற்றில் உயர்மட்ட பாலத்தினை ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு உரிய திட்ட அறிக்கையினை மீன்வளத்துறை மூலம் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கலெக்டர் தண்டபாணி தெரிவித்தார்.
அப்போது முன்னாள் நகரசபை தலைவர் குமரன், முன்னாள் துணைத்தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மீனவர் அணி செயலாளர் தங்கமணி, பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் கந்தன், வார்டு செயலாளர்கள் பஞ்சநாதன், ஜெயகுமார், ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story