பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி


பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 7:07 AM IST (Updated: 23 April 2018 7:07 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகர சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் வரவேற்றார். மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் அ.தி.மு.க. உடைந்த பின்னர் தற்போது காங்கிரஸ் கட்சி 2-வது பெரிய கட்சியாக உள்ளது. மாற்று ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் தான் தர முடியும். முதல்-அமைச்சர் ஆகும் தகுதி எனக்கு உண்டு. காங்கிரஸ் தொண்டர்களின் ஆசை மீண்டும் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும்‘ என்றார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. விசுவநாதன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அந்தோணிமுத்து நன்றி கூறினார்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. காமராஜர் பிறந்த நாளுக்கு முன்பு இப்போது இருக்கும் 35 லட்சம் கட்சி உறுப்பினர்களை 50 லட்சமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். இந்த பயணத்திற்கு பின்னர், விருதுநகரில் தொடங்கி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வேன் மூலம் பொதுமக்களை சந்திப்பதற்காக யாத்திரை செல்ல இருக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை பொறுத்தவரை 6 மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. தற்போது மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளது. இதனை எடப்பாடி அரசால் கண்டிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. அரசு பா.ஜனதாவின் பினாமி அரசாக, ஊழல் அரசாக செயல்பட்டு வருகிறது.

அனைத்து கட்சி சார்பில் எல்லோரும் சேர்ந்து பிரதமரை சந்திக்க கால அவகாசம் கேட்டு இருந்தோம். ஆனால் அதற்கும் அவர் அனுமதி தரவில்லை. இன்று (திங்கட்கிழமை) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின்னர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளோம். அவர் நேரம் ஒதுக்கி தர வேண்டும். அப்படி அவர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், பிரதமர் மோடி தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம். தமிழக மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து காட்டுவோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story