கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு


கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 April 2018 3:00 AM IST (Updated: 24 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரையும் அலுவலக நுழைவு வாசலிலேயே போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அப்போது ஒரு பெண் தன்னுடைய தங்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலுக்கு வந்தார். அவர் வைத்திருந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் வாங்கி சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. உடன் அந்த மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் அவரிடம் இருந்து கைப்பற்றினர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அவர் குறிஞ்சிப்பாடி அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்த தெய்வசிகாமணி மனைவி ஜெயராணி (வயது 50) என்று தெரிய வந்தது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அவரும், அவருடைய மகள் கிரிஜா, ஜெயராணி தங்கை தங்கம் ஆகிய 3 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாகவும், ஆனால் அந்த வீடுகளை கோவில் நிர்வாகத்தினர் அவர்கள் இல்லாத நேரத்தில் காலி செய்து விட்டதாகவும், ஆகவே தங்களுக்கு மாற்று இடம் கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தபோது, அவர் அவமரியாதையாக பேசி விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தோடு கடந்த 4 நாட்களாக தெருவோரம் வசித்து வருவதாகவும், ஆகவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்தார். உரிய நடவடிக்கை இல்லையென்றால் மண்எண்ணெய் ஊற்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் வந்ததாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜெயராணியை கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக உள்ளே அனுப்பி வைத்தனர். அவர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று கலெக்டர் தண்டபாணியிடம் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மாற்று இடம் வழங்க கோரி குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story