காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி


காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 23 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-24T02:05:23+05:30)

காட்டுமன்னார்கோவில் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் பெரியதெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரும் திருச்சி பொன்மலையை சேர்ந்த ராமு மகள் சசிகலா(26) என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் வரோகா(3).

இந்த நிலையில் சசிகலா மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வினோத் வெளிநாட்டுக்கு சென்றார். இதனால் சசிகலா திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறுது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சசிகலா தனது 2 குழந்தைகளுடன் முட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார். இதையடுத்து அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் சசிகலா, வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மாமியார் விஜயா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சசிகலாவை மீட்டார்.

இதற்கிடையில் சசிகலாவின் அருகில் 2 குழந்தைகளும் மயங்கி கிடந்தது. இதையடுத்து 2 குழந்தைகளையும் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு எனது மாமா மகன் வினோத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 2-வது குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிட முடியாமலும், செரிமான பிரச்சினையால் வயிற்று வலியாலும் அவதியடைந்து வந்தேன். இதற்காக பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் எனது 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி நேற்று எனது 2 மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றபோது, எனது மாமியார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் என்னை காப்பாற்றி விட்டார். இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.

இதையடுத்து சசிகலா சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி விஜயா காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story