பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 April 2018 3:15 AM IST (Updated: 24 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

மேட்டுப்பாளையம்,

தமிழகத்தில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் சுற்றுலா காவல் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி ரெயில்வே சுற்றுலா காவல் உதவி மையத்தை தொடங்கி வைத்து தன்னார்வ இளைஞர்களுக்கு சுற்றுலா கையேட்டை வழங்கி பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோடை காலம் தொடங்கி விட்டதால் ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ் வரம், கன்னியாகுமரி மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு மற்றும் வட இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்தி, ஆங்கிலம் தெரிந்த தன்னார்வ இளைஞர்களை கொண்டு சுற்றுலா காவல் உதவி மையங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் தொடங்கப்பட உள்ளன.

ரெயில்வே காவல்துறையில் மூன்றில் ஒரு பங்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். ரெயிலில் பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் இருப்பார்கள். பெண்கள் சம்பந்தமாக அனைத்து புகார்களையும் விசாரிப்பதற்கும் பெண் அதிகாரிகள் உள்ளனர். ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும்போது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சாதாரண வழக்காக இருந்தாலும் அதை பதிவுசெய்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். போலீசை கண்டு பொதுமக்களுக்கு பயம் வரக்கூடாது, குற்றவாளிகளுக்கு மட்டும்தான் பயம் வரவேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருக்க, பழைய குற்றவாளிகள் யார் மற்ற மாநில குற்றவாளிகள் யார் என்று அடையாளம் கண்டு வெளியே நடமாட முடியாமல் சிறையில் அடைக்கபடுவார்கள். ரெயில்வே பாதுகாப்பு படையினரும் எங்கள் குழுவில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை உட்கோட்ட ரெயில்வே டி.எஸ்.பி. வெற்றிவேந்தன் வரவேற்றார். ரெயில் நிலைய கண்காணிப்பாளர் ஆர்.வேதமாணிக்கம், ரெயில் நிலைய உதவி கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, ஏசுராஜ், பொறியாளர் அஸ்ரப் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

அதன்பின்னர் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரெயில் நிலையவளாகத்தில் உள்ள நீலகிரி மவுண்டன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். மேலும் ரெயில்வே போலீசார் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலையும் திறந்து வைத்தார். மலைரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளிடம் மலை ரெயிலின் சிறப்புகள் பற்றி கூறினார். 

Next Story