விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவருடைய மகன் ராஜேஸ்கண்ணா (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு 3-ம் ஆண்டு படித்து வந்தார். ராஜேஸ் கண்ணா தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

கடந்த 17-ந் தேதி அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவுமின்றி நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி அவருடைய பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர். இதனைக்கேட்டு அவர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவது அரிது என்பதால், அவருடைய உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து ராஜேஸ் கண்ணாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

அவரது இதயம் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 11.30 மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இதயம் பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தில்லைநகரில் இருந்து 10 நிமிடத்தில் திருச்சி விமானநிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு சென்றனர். 2 கண்கள், திருச்சியில் உள்ள கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று, கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே தனியார் மருத்துவமனையில் உறுப்புகள் செயலிழந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேர் வாழ்வு பெற்று உள்ளனர். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தது குறித்து ராஜேஸ்கண்ணாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ உடல் உறுப்புகளை தானம் வழங்கியதன் மூலம், எனது மகன் நீண்டகாலம் வரை வாழ்வான். இதேபோல் மற்றவர்களும் உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். 

Next Story