லோக் அதாலத் மூலம் 1,344 வழக்குகளுக்கு தீர்வு


லோக் அதாலத் மூலம் 1,344 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 24 April 2018 3:15 AM IST (Updated: 24 April 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,344 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை,

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுபடியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தில் 12 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகளும், வங்கிக்கடன் நிலுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சிவகங்கையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி செந்தூர் பாண்டியன், மாவட்ட கூடுதல் நீதிபதி தனியரசு, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிபதி சசிரேகா, சார்பு நீதிபதிகள் வடிவேலு, செல்வக்குமார், மாவட்ட முன்சீப் திருஞானசம்பந்தம், நீதித்துறை நடுவர் லலிதாராணி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

இதேபோன்று திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தனர். மாவட்டம் முழுவதும் 1,289 குற்ற வழக்குகளும், 124 செக் மோசடி வழக்குகளும், 59 வங்கிக்கடன் வழக்குகளும், 142 வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், 19 குடும்ப பிரச்னை தொடர்பான வழக்குகளும், 174 சிவில் வழக்குகளும் என மொத்தம் 1,807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 1,344 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 252 வரை பயனாளிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் நிர்வாக அதிகாரி மணிமேகலை, பானுமதி மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். 

Next Story