குட்டைகாடு பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குட்டைகாடு பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 24 April 2018 3:45 AM IST (Updated: 24 April 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

குட்டைகாடு பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள பெரலிமேடு, டி.மேட்டுப்பாளையம், பெருமாபாளையம், குட்டைகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு, தனியார் பள்ளிக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது குட்டைகாடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடையை வருகிற 1-ந்தேதி திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மதுக்கடை அமைக்கப்பட்டு உள்ள இடம் வழியாகத்தான் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் சென்று வருகிறார்கள். எனவே இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் குடிமகன்களால், மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே குட்டைகாடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மதுக்கடையை திறக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தலித் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் 12 பேர் கண்களில் கருப்பு துணி கட்டிவந்து கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தாவது:-

அம்பேத்கர் பிறந்தநாள் அன்று கொடுமுடி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தில் அவரது உருவம் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அம்பேத்கர் உருவ படத்தை கிழித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அம்பேத்கர் உருவ படத்தை கிழித்து அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

பெருந்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள முறைகேடான தோல் மற்றும் டயர் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே முறைகேடாக இயங்கும் தோல் மற்றும் டயர் தொழிற்சாலைகளை உடனடியாக மூடவேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கட்டியுள்ள 21 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி அதை இடிக்க நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சிவகிரி குலவிளக்கு பகுதியை சேர்ந்த ஆனந்தக்குமார் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘தனது வேலைவாய்ப்பு பதிவு எண்ணை வேறு ஒருவர் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 259 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்த ஒருவரின் குடும்பத்துக்கும், பாம்பு கடித்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இலங்கையில் பிறந்து சூழ்நிலை காரணமாக குடும்பத்துடன் குடிபெயர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் ராஜலட்சுமி என்பவருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Next Story