விபத்துக்களை குறைக்க நடவடிக்கை: புதுவை பஸ் நிலையம் வெளி இடத்துக்கு மாற்றப்படும், நாராயணசாமி தகவல்


விபத்துக்களை குறைக்க நடவடிக்கை: புதுவை பஸ் நிலையம் வெளி இடத்துக்கு மாற்றப்படும், நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 24 April 2018 5:30 AM IST (Updated: 24 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

விபத்துக்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை பஸ் நிலையத்தை வெளி இடத்துக்கு மாற்றும் சூழல் உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 30-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார்.

சாலைப் போக்குவரத்து வாரவிழாவினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட வாட்ஸ்-அப் வீடியோ மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. காவல்துறை இயக்குனரும் முயற்சிகளை எடுத்துள்ளார். முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமரா, சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நமது மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 13 லட்சம்தான். இதுதவிர வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இந்தநிலையில் சாலைகளையும் அகலப்படுத்த முடியவில்லை. அதற்கு முயற்சி எடுத்தால் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

2 பேர் செல்லும் மோட்டார் சைக்கிளில் 4 பேர் செல்கின்றனர். ஆட்டோக்களிலும் அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றுகின்றனர். விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. விபத்துகளை உயிரிழப்பை தடுக்கும் விதமாக முன்பு கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கொண்டுவந்தோம். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. ஹெல்மெட் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் சிக்னல்களில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஆடியோக்கள் ஒலிக்கப்பட்டன. அதைக்கேட்டு மக்கள் மனமாற்றம் அடைகிறார்கள். எனவே தற்போது அதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபரப்ப உள்ளோம்.

புதுவை நகரம் தரம் வாய்ந்த நகராக (ஸ்மார்ட் சிட்டி) மாற உள்ள நிலையில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளோம். அதற்கு தகுந்தாற்போல் பஸ், லாரி, ஆட்டோ, கார் உரிமையாளர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். புதுவை பஸ் நிலையமும் மாற்றப்பட்டு வெளியே போகும் சூழல் உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரியால் இயங்கும் பஸ் விடப்போகிறோம். கடந்த ஆண்டு 12 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. 1,500 விபத்து வழக்குகளில் 218 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு அதற்கும் குறைவாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் ஷாஜகான் பேசும்போது, சாலை பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் பாடத்திட்டம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போக்குவரத்துத்துறை செயலாளர் சரண், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, திருபுவனை பகுதியில் நடந்த அசம்பாவித சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு மரண அடி கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

Next Story