காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.சார்பில் மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.சார்பில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 5:00 AM IST (Updated: 24 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி பிரச்சினைக்காக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

புதுவை அண்ணா சாலையில் புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையிலும், நேரு வீதியில் புதுவை வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில்முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு அவைத்தலைவர் பலராமன், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், நீலகங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் பெருமாள், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, ம.தி.மு.க. செயலாளர் சந்திசேகரன், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், மனித நேய மக்கள் கட்சி அமைப்பாளர் பஷீர் அகமது, மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன், தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுவை அண்ணா சாலை மற்றும் நேரு வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

புதுவை அண்ணா சாலையில் இருந்து காமராஜர் சிலை, நேரு வீதி கடைசி வரையிலும் சாலையின் ஒருபுறம் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

மனித சங்கிலி போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம். அதையடுத்து புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றார்.

மனித சங்கிலி போராட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரது படத்தை முகமூடியாக அணிந்தவர்கள் காவிரித்தாய் வேடமணிந்த பெண்மணியை சங்கிலியால் இழுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு காவிரி நீரை தடுப்பது போன்று செய்தது தத்ரூபமாக இருந்ததுடன் போராட்டத்தின் தன்மையை விலக்குவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story