வில்லியனூர் அருகே நடந்த சம்பவம்: ரவுடி கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


வில்லியனூர் அருகே நடந்த சம்பவம்: ரவுடி கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 April 2018 4:45 AM IST (Updated: 24 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். யார் பெரியவன்? என்பதில் ஏற்பட்ட மோதலால் பழிதீர்த்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 34) பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பலமுறை சிறைக்கு சென்றுள்ள இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் மங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 21-ந்தேதி தனது கூட்டாளி ஜெயசூர்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேவதாஸ் சென்றார். பாரதியார் கூட்டுறவு வங்கி அருகே சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் தேவதாசை வழிமறித்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான அய்யனார் என்ற ராஜதுரை(26), விநாயகம் என்ற விநாயகமூர்த்தி(24) ஆகிய 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் முன்விரோதம் காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து தேவதாசை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசில் அய்யனார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் தேவதாஸ் இருந்தார். அப்போது நானும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறைக்கு சென்றேன். சிறையில் எங்களுக்குள் யார் பெரியவன் என்பதில் மோதல் ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் என்னை கொலை செய்ய தேவதாஸ் திட்டமிட்ட விவரம் தெரியவந்தது. எனவே அவரை கண்காணித்த போது பாரதியார் கூட்டுறவு வங்கி வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வது தெரியவந்தது. எனவே அங்கு வைத்து கொலை செய்வது என முடிவு செய்து சம்பவத்தன்று அங்கு பதுங்கி இருந்தோம்.

எதிர்பார்த்தது போல் பாரதியார் கூட்டுறவு வங்கி அருகே தனது கூட்டாளியுடன் வந்த போது நான் எனது கூட்டாளிகளுடன் வழிமறித்து தேவதாசை வெட்டி கொலை செய்து பழி தீர்த்தேன். பின்னர் நாங்கள் தமிழக பகுதியில் தலைமறைவாக இருந்தோம். போலீசார் எங்கள் 2 பேரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story