சிறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு: கைதிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க ஆலோசனை


சிறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு: கைதிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க ஆலோசனை
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சிறைச்சாலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கைதிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்பிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறு சிறு வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று வரும் இளைஞர்கள் பலர் பெரிய குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை இருந்து வருகிறது. சமீப காலமாக புதுவை சிறையில் இருந்து வெளிவரும் குற்றவாளிகள் பலர் மீண்டும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றிய தகவல்கள் கவர்னர் கிரண்பெடியின் கவனத்துக்கு சென்றன. இதைத்தொடர்ந்து நேற்று கவர்னர் கிரண்பெடி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். அவரை சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா வரவேற்று அழைத்துச் சென்றார்.

அங்கு ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி கைதிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கைதிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், வேலைகள் குறித்தும் தெரிந்துகொண்டார்.

அப்போது கைதிகளை திருத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா விளக்கம் அளித்தார். கைதிகளுக்கு நல்லொழுக்கம் தொடர்பாக கவுன்சிலிங் தர புதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தன்னார்வலர்களின் உதவிகள் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கவர்னர் கிரண்பெடி உறுதியளித்தார்.

சிறையில் இருந்து திரும்பிய கிரண்பெடி கவர்னர் மாளிகையில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொடிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைப்பதில் எதிர்ப்பு தெரிவிப்பதில் சட்டத்துறை, காவல்துறை இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் காலதாமதமின்ற நடைபெற அறிவுறுத்தினார்.

அவற்றை விரைவுபடுத்தி குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுதொடர்பான முடிவுகளை தீவிரமாக கண்காணித்து எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Next Story