ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்: கூலித்தொழிலாளி கைது
பெரியகுளம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்கிய வழக்கில் கூலித்தொழிலாளி ஒருவர் கைதாகியுள்ளார்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கோபி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாக்கியராஜ் (வயது 37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று கோபி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாக்கியராஜ் மற்றும் அவருடைய தம்பிகள் பால்செல்வம் (24), பெரியசாமி (22), தினகரன் (30) மற்றும் உறவினர்கள் முருகேஸ்வரி, மலையரசி, மைதிலி ஆகிய 7 பேரும் சேர்ந்து கோபியை தாக்கினர்.
இதனை அறிந்த கோபியின் அக்காள் ரேவதி (30) சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 7 பேரும் ரேவதியை கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வந்த ரேவதியின் தாயார் தனத்துக்கும் அடி-உதை விழுந்தது. தாக்குதலில் காயம் அடைந்த கோபி, ரேவதி, தனம் ஆகியோருக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story