தூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்


தூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 24 April 2018 3:31 AM IST (Updated: 24 April 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது;-

எங்கள் கிராமத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளன. நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது எங்கள் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு, அதில் தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் தடையில்லா சான்றிதழ் பெறாமல் இந்த பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் பகுதி மக்களை காற்றாலை நிறுவனம் மிரட்டி வருகிறது.

எங்கள் பகுதியில் காற்றாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் குடிநீர், தூய்மையான காற்று ஆகியவை மாசுபடும். எனவே காற்றாலை அமைப்பதற்கான தடையில்லா சான்றினை அரசு வழங்கக்கூடாது. மேலும் தற்போது நடந்து வரும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரை கீழக்கல்லாம்பாறையை சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த மனுவில், நான் எங்கள் ஊர் கமிட்டி நிர்வாகிகளிடம் 2008-ம் ஆண்டு ஊர் வரவு, செலவுகணக்கை கேட்டதால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளனர். இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் ஊர் கமிட்டி நிர்வாகிகள் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக சொந்த ஊரில் அகதிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் போலீசார் மற்றும் ஊர் கமிட்டியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சமுதாய சங்க தலைவர் கயாஸ் கொடுத்த மனுவில், கடந்த 2009-ம் ஆண்டு திருச்செந்தூர் கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்க முயற்சித்த போது கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை கருதி அந்த கூட்டத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதேபோல் தான் 1996-ல் ஸ்டெர்லைட் ஆலை அமைவதற்கு நாங்கள் எதிர்த்தோம். அந்த ஆலையை மாவட்ட நிர்வாகம் மூட வேண்டும்.

நிலக்கரி தூள் கழிவுகளால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. மேலும் கடல் மாசுப்பட்டு மீன் இனப்பெருக்கமும் இருக்காது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நாங்கள் கடலில் நிலக்கரி இறக்க அனுமதிக்கமாட்டோம். எனவே கல்லாமொழியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், மேலதட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடந்தது வருகிறது. அந்த பகுதிகளுக்கு செல்ல பாதை இல்லாததால் அந்த நிறுவனம் சார்பில் விவசாய நிலம் மற்றும் அரசு இடத்தில் அனுமதி பெறாமல் பாதை அமைத்தும், மின்கம்பங்கள் அமைத்தும் வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நில உரிமையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். மேலும் அந்த தனியார் நிறுவனம் எந்த அனுமதியும் பெறாமல் போலியான சான்றிதழ்களை காண்பித்து கட்டுமான பணிகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்த காற்றாலை நிறுவனம் சார்பில் அரசு இடத்தில் போடப்பட்ட பாதைகள் அகற்றப்பட்டன. தற்போது ஊத்துமலையை சேர்ந்த நபர் உண்மை தன்மை இல்லாத சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் காண்பித்து அனைத்து கனரக வாகனங்கள் செல்ல மீண்டும் அரசு இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த போலி சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான அருந்ததியர் மக்கள் உள்ளோம். எங்கள் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட குடியிருப்பு பகுதியில் நகராட்சி சார்பில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. மேலும் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு மீதி இருந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் எங்கள் சமூகத்துக்கு சொந்தமான கோவிலை நகராட்சி நிர்வாகம் இடிக்க உள்ளது. ஆனால் அந்த கோவில் திருவிழா வருகிற ஜூன் மாதம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் திருவிழா முடியும் வரை அனுமதி கேட்டு உள்ளோம். மேலும் அந்த கோவில் இடிக்கப்படும் பட்சத்தில், புதிய கோவில் கட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் உள்ள இடத்தை கோவில்கட்ட வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story