கழுகுமலை அருகே நெல் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


கழுகுமலை அருகே நெல் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2018 3:42 AM IST (Updated: 24 April 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே தொழிலில் நஷ்டம் அடைந்ததால், நெல் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கழுகுமலை,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே குமாரபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேப்ப மரத்தில் நேற்று முன்தினம் மாலையில் 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கழுகுமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்தவரின் சட்டைப் பையில் வங்கியின் ஏ.டி.எம். கார்டு இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் அக்ரஹாரம் 2-வது தெருவைச் சேர்ந்த ஆண்டியப்பன் (வயது 47) என்பது தெரிய வந்தது. நெல் வியாபாரியான இவர் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார். ஆண்டியப்பனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார்.

ஆண்டியப்பன் கடந்த 18-ந் தேதி சங்கரன்கோவிலில் உள்ள தன்னுடைய அக்காளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற அவர் மாயமானார். ஆண்டியப்பன் தொழில் விஷயமாக வெளியூருக்கு சென்று இருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதினர். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் ஆண்டியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்த ஆண்டியப்பனுக்கு ராஜேசுவரி (45) என்ற மனைவியும், தங்கராஜ் (22), சுந்தர மகாலிங்கம் (17), கோமதி சங்கரன் (13) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

Next Story