நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு


நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2018 5:30 AM IST (Updated: 24 April 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

மும்பை,

ரத்னகிரி மாவட்டம் நானார் பகுதியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்துக்கு நானார் பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மராட்டிய காங்கிரஸ் செயலாளர் ராஜன் போஸ்லே தலைமையில் நானாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்த காங்கிரஸ் குழுவினர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினர்.

இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சியும் நானார் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதையடுத்து நேற்று பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்துக்கு எதிராக சிவசேனா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

நாக்பூரை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நாக்பூருக்கு மாற்றம் செய்யயுமாறு கேட்டுள்ளார்.

இதன்படி இந்த திட்டத்தை நாக்பூருக்கு வேண்டுமானால் கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் குஜராத்துக்கு கொண்டு செல்லுங்கள். ஆனால் நானார் மற்றும் கொங்கன் பகுதியில் இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

திட்டம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டதும் மோடி, ஷா, ஜெயின் உள்ளிட்ட குடும்ப பெயர்களை கொண்ட சில நில மாபியாக்கள் சத்தமில்லாமல் இங்கு நிலம் வாங்கி வருகின்றனர். இந்த திட்டத்தை எந்த காரணம் கொண்டும் சிவசேனா நிறைவேற்றவிடாது.

இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்று பேசிய மராட்டிய தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய், நானார் பெட்ரோலிய திட்டத்தின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பை அவர் ரத்து செய்வதாக கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மும்பையில் நிருபர்களை சந்தித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நானார் திட்டம் குறித்த சுபாஷ் தேசாயின் அறிவிப்பை மாநில அரசு நிராகரிப்பதாக தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

சுபாஷ் தேசாயின் அறிவிப்பு அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். மாநில அரசு இதற்கு பொறுப்பாகாது. நிலம் கையகப்படுத்துதல் குறித்த அறிவிப்பை ரத்து செய்வதற்கான அதிகாரம் மாநில தலைமை செயலாளர் தலைமையிலான கமிட்டிக்கு மட்டுமே உள்ளது. இந்த பிரச்சினையில் நானார் மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு முடிவெடுக்கும்.

சுபாஷ் தேசாயின் அறிவிப்பை முதல்-மந்திரி நிராகரித்து இருப்பதால் பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையேயான மோதல்போக்கு தீவிரமடைந்து உள்ளது

இந்தநிலையில் மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே(தேசியவாத காங்கிரஸ்) நிருபர்களிடம் கூறியதாவது:-

நானார் திட்ட அறிவிப்பை ரத்து செய்ததாக மந்திரி சுபாஷ் தேசாய் கூறுவது கேலிக்கூத்து. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவசேனா மற்றும் பா.ஜனதாவினர் கொங்கன் பகுதி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். மக்களும் அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் இது குறித்து நீங்கள்(சுபாஷ் தேசாய்) அனுமதி பெற்றீர்களா?, மந்திரி சபை கூட்டம் ஏதேனும் முடிவு எடுத்துள்ளதா?, இன்றைக்கு பேரணி நடத்தும் சிவசேனா திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகளின்போதே எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story