ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி பொதுமக்கள் முற்றுகை


ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 April 2018 4:27 AM IST (Updated: 24 April 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 36). எலக்ட்ரீசியனான இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

சீனிவாசனுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற சீனிவாசன், பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் முற்றுகை

இந்தநிலையில் நேற்று சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் போந்தூர் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அந்த தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். சிலர் தொழிற்சாலையின் உள்ளே செல்ல முயன்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டோரும் வந்து பொதுமக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story