ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி பூ வியாபாரிகள் 2 பேர் பலி


ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி பூ வியாபாரிகள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 April 2018 4:32 AM IST (Updated: 24 April 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே, லாரி மோதி பூ வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள அல்லிகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் மகி(வயது 45). வெங்கலை சேர்ந்தவர் சங்கர்(39). இவர்கள் இருவரும் பூ வியாபாரிகள் ஆவர். நேற்று காலை இவர்கள் இருவரும் பூ பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அல்லிகுழி புறப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரி காட்டுப்பகுதியில் உள்ள சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இருவரும் பலி

இதில் மோட்டார் சைக்கிள் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூ வியாபாரிகள் மகி, சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த உடன் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து, பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story