வல்லம்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 28 குடும்பத்தினர் கருணை கொலை செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் மனு


வல்லம்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 28 குடும்பத்தினர் கருணை கொலை செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 April 2018 4:46 AM IST (Updated: 24 April 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

வல்லம்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவ குடும்பத்தினர் தங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மெதிப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வல்லம்பேடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள், தங்கள் கையில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளுடன் நேற்று திடீரென திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் வல்லம்பேடு குப்பம் பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். மீனவ இனத்தை சேர்ந்த நாங்கள், மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு கூடம் ரூ.5 கோடியில் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தரம் இல்லாமல் உப்புமண் கலந்து கட்டி உள்ளனர்.

ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

இதுபற்றி தட்டிக்கேட்ட எங்களை, ஒரு தரப்பினர் தகாத வார்த்தையால் பேசி ஆட்களை வைத்து தாக்குதல் நடத்தினர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். சம்பவ இடத்துக்கு ஆர்.டி.ஓ. வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது பற்றி நாங்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் எங்கள் தரப்பினர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மற்றொரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

கருணை கொலை செய்ய வலியுறுத்தல்

இந்தநிலையில் எங்கள் தரப்பை சேர்ந்த 28 குடும்பங்களை சேர்ந்த 110 பேரை ஊரைவிட்டு விரட்டியடித்தனர். தற்போது நாங்கள், நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கடந்த 18 மாதங்களாக உடமைகள் ஏதும் இல்லாமல் அவதியுடன் வசித்து வருகிறோம்.

எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டு மீண்டும் எங்களை கிராமத்துக்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை ஊரை விட்டு விரட்டி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎனில் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. அல்லது எங்களை கருணை கொலை செய்யுங்கள் என கலெக்டரிடம் வலியுறுத்தவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் இதே கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story