வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 29-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தொடக்க நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், வெற்றிவேல், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டு பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் சாலைபாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
முன்னதாக ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-
45 சதவீதம் குறைவு
சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கம், சாலைகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். சேலம் மாவட்டத்தில் தொடர் விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து ரூ.3 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் விழிப்புணர்வு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன.
வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், திரும்பும் முன் சிக்னல் செய்தல், இரவு நேரங்களில் எதிரில் வாகனம் வரும்போது ஒளியளவை குறைத்தல், ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் நின்று.. பார்த்து... செல்லுதல், சாலை சந்திப்பில் வேகத்தை குறைத்தல், முன் செல்லும் வாகனத்தில் இருந்து இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வி.கதிரவன்(சேலம் கிழக்கு), தாமோதரன்(சேலம் மேற்கு), பாஸ்கரன்(சேலம் தெற்கு), ஜெயகவுரி(ஆத்தூர்), அங்கமுத்து(சங்ககிரி), சிங்காரவேலன்(மேட்டூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதுவைநாதன், குலோத்துங்கன், புஷ்பா, வெங்கடேசன், செந்தில் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளி ஓட்டுனர்கள், கல்வி நிறுவன வாகன ஓட்டுனர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story