பிரபல வங்கிகளில் 582 அதிகாரி பணிகள்


பிரபல வங்கிகளில் 582 அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 24 April 2018 5:28 AM GMT (Updated: 2018-04-24T10:58:23+05:30)

2 முன்னணி வங்கிகளில் அதிகாரி பணிக்கு 582 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பிரபல வங்கியான இதில் தற்போது எச்.ஆர். தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 375 இடங்களும், டெரிட்டோரி ஹெட் பணிக்கு 37 இடங்களும், குரூப் ஹெட் பணிக்கு 6 இடங்களும் உள்ளன. மற்றும் சில பிரிவில் மேலாளர் தரத்திலான பணிகள் உள்ளன. மொத்தம் 424 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பிரிவு பணிகளிலும் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, கோவை, இந்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இந்த பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:

சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணிக்கு 23 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 6-5-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக் கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், பணியிடங்கள் உள்ள பிரிவில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர்களுக்கு ஏராளமான பிரிவில் பணி வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.ஏ. படிப்பு சிறப்புத் தகுதியாக கருதப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

குழு கலந்துரையாடல் அல்லது நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 6-5-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bankofbaroda.co.in/careers.htm என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

பேங்க் ஆப் இந்தியா

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபீசர் பணிக்கு 158 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 72 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 28 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், வணிகவியல், அறிவியல், பொருளாதாரவியல் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பை படித்தவர்களாக இருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., கம்பெனி செகரட்ரி படித்தவர்கள், எம்.பி.ஏ., முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக 5-5-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு 10-6-2018-ந் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bankofindia.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story