தினம் ஒரு தகவல் : பூச்சிக் கொல்லியால் வீரியம் பெற்ற பூச்சிகள்


தினம் ஒரு தகவல் : பூச்சிக் கொல்லியால் வீரியம் பெற்ற பூச்சிகள்
x
தினத்தந்தி 24 April 2018 11:53 AM IST (Updated: 24 April 2018 11:53 AM IST)
t-max-icont-min-icon

நமது மூதாதையர்களின் வேளாண்மை சுய சார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்களின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்து வந்தனர்.

தொழிற்புரட்சிக்குப் பின்பு உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன. பசுமைப்புரட்சி என்ற பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற கவர்ச்சிகள் வேளாண்மையில் திணிக்கப்பட்டன. ‘அதிக விளைச்சலுக்கு எதிரி‘ என்ற முத்திரையுடன் பூச்சிகளுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் அங்குதான் தொடங்கி வைக்கப்பட்டது.

உலகப் போர்களில் மனித உயிர்களைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து மூலப்பொருட்களில் இருந்து தான் செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் தயாரிக்கப்பட்டன. இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொல்வதைவிட, வேளாண் விளைபொருட்களை உண்ணும் மனிதரை மெல்லக் கொல்லும் விஷமாக மாறிவிட்டதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவருகிறது. இப்படி உயிர்க்கொல்லிகளாக உருவெடுத்திருக்கும் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும் முடியாமல், கைவிடவும் வழியின்றி இன்றைய விவசாயிகள் தடுமாறுகிறார்கள்.

மனிதர்களைவிட பரிணாமத்தில் பல மடங்கு மூத்தவை பூச்சி இனங்கள். அளவில் சிறிதானாலும் பூச்சிகளின் உருமாற்றம், இனப்பெருக்கம் என அவற்றின் பிரம்மாண்ட உலகு விசித்திரமானது. முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு உருமாற்ற நிலைகளைக் கொண்டது பூச்சியின் வாழ்க்கை சுழற்சி.

அவை அடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்போது, அவற்றை அழிப்பதற்கு முன்பைவிட வீரியமான பூச்சிக்கொல்லிகள் அவசியமாகிறது. பூச்சியினங்கள் ஈனும் முட்டைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த முட்டைகளில் இரண்டு சதவீதம் மட்டுமே முழு பூச்சிகளாகின்றன. பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் முட்டை பூச்சியாகும் சதவீதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பூச்சிக்கொல்லிகள் பயன் அளிக்காததற்கு எளிமையான உதாரணம், நாம் பயன்படுத்தும் கொசுவிரட்டி மருந்துகள். கொசுக்களை அழிக்காமல் அவற்றை விரட்ட மட்டுமே செய்யும் இந்த வேதிப்பொருட்களால், அவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்ட 75 ஆண்டுகளில் கொசுக்களின் எதிர்ப்புத்திறன் கூடிக்கொண்டே செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கேற்ப கொசுவிரட்டி மருந்துகளின் நச்சு வீரியத்தை அதிகரித்து வருகிறார்கள். இதன் விளைவாக கொசு மட்டுமன்றி, ஏராளமான பூச்சியினங்களின் எதிர்ப்புத்திறன் வளர்க்கப்பட்டு விட்டது என்ற ஆராய்ச்சி முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

Next Story