பூமிக்கு அருகிலுள்ள புறக்கோள்களைக் கண்டறியும் புதிய செயற்கைக்கோள்


பூமிக்கு அருகிலுள்ள புறக்கோள்களைக் கண்டறியும் புதிய செயற்கைக்கோள்
x
தினத்தந்தி 24 April 2018 1:39 PM IST (Updated: 24 April 2018 1:39 PM IST)
t-max-icont-min-icon

‘ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்’ என்றொரு பழமொழி உண்டு. சமகால சமூகத்தில் மனிதனுக்கு ஆடை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உறுதிசெய்யும் கூற்றுதான் இந்த பழமொழி.

‘வாழ்க்கையில் தேடல் இல்லாத மனிதன் கால் மனிதன்’ என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில், மனிதனுக்கு தேடல் என்பது நம் வயிற்றுப் பசியைப் போன்றது. ஒரு சராசரி மனிதன் எப்படி பசியில்லாமல் வாழ முடியாதோ, அதுபோலவே தேடல் இல்லாமலும் மனிதர்களால் இந்த உலகில் வாழ முடியாது.

அப்படிப் பார்த்தால், மனிதர்களின் தற்போதைய ‘ஹாட்’டான தேடல் என்னவென்றால், விண்வெளியில் இருக்கும் வேற்று கிரகங்கள் அல்லது புறக்கோள்களில் பூமிக்கு நிகரான சூழலமைப்பு மற்றும் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு புறக் கோளை கண்டறிவதுதான்.

கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட புறக்கோள் தொடர்பான தேடல்கள் பிரமிப்பூட்டும் பல புறக்கோள்களை நமக்கு அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதுவரை கண்டறியப்பட்டுள்ள புறக்கோள்கள் உயிர்வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய முடியவில்லை.

ஏனென்றால், இதுவரை கண்டறியப்பட்ட புறக்கோள்களில் பெரும்பாலானவை பூமியிலிருந்து மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கின்ற காரணத்தால் அவற்றை ஆய்வு செய்வது கடினம்.

புறக்கோள்களின் தூரம் தொடர்பான நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க, பூமிக்கு அருகிலுள்ள புறக்கோள்களை ஆய்வு செய்யும் ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ தற்போது அறிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்கான தகவல்களை சேகரிக்கும் புதிய தொலைநோக்கி (டெலஸ்கோப்) ஒன்றை கடந்த 18-ந் தேதி அன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கேப் கெனாவரல் நகரில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய அங்கமான ‘டெஸ்’ (TESS: Transiting Exoplanet Survey Satellite) எனும் செயற்கைக்கோள் சுமார் இரண்டு லட்சம் நட்சத்திரங்களின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடுவதன் மூலம் புதிய புறக்கோள்களை கண்டறிய உள்ளது.

அதாவது, நட்சத்திரங்களுக்கு கடந்து செல்லக்கூடிய உருவங்களால் அதன் பிரகாசத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே இதுவரை புறக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை விண்வெளியில் உள்ள பல கோள்களை கண்டறிந்து வரும் ‘கெப்லர்’ செயற்கைக் கோளானது, மிகவும் தூரத்திலுள்ள மங்கலான வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்களை சுற்றி வந்தது. ஆனால், டெஸ்-ல் உள்ள நான்கு கேமராக்களும் பூமிக்கு அருகிலுள்ள, முக்கியமாக கெப்லர் கண்டறிந்த நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 முதல் 100 மடங்கு அதிகமான பிரகாசம் கொண்ட நட்சத்திரங்களை படம்பிடித்து ஆய்வு செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, TESS செயற்கைக்கோள் பூமிக்கு அருகிலுள்ள கோள்களை ஆய்வு செய்வதால் அந்த கோள்கள் குறித்த பல தகவல்களை சுலபமாக கண்டறிய முடியும் என்கிறது நாசா. டெஸ் (TESS) செயற்கைக்கோளானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பால்கன்-9 (Falcon 9) போன்ற ராக்கெட் ஒன்றின் மூலமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பூமியை சுற்றிய கோள் பாதைகளில் இதற்கு முன்னர் எந்த செயற்கைக்கோளும் செல்லாத கோள்பாதையில் டெஸ் செயற்கைக்கோள் சுற்றிவரும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, நிலவின் கோள் பாதையைத் தாண்டி வெகுதூரத்தில் உள்ள ஒரு கோள்பாதையில் டெஸ் சுற்றிவரும். மேலும், ஒவ்வொரு கோள் பாதையையும் தாண்டிச் செல்ல டெஸ் சுமார் 14 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும், தனது கோள் பாதையை அடைந்த பின்னர் பல பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான வருடங்கள் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும் என்றும் கூறுகிறது நாசா. டெஸ் செயற்கைக்கோளின் கோள் பாதையின் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், நிலவோ அல்லது பூமியோ கூட இதன் கோள் பாதையில் இடையூறாக வராது. அதனால், டெஸ் செயற்கைக்கோள் எவ்வித தடையுமின்றி நட்சத்திரங்களை தொடர்ச்சியாக ஆய்வுசெய்துகொண்டே இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story