அசாம் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கலிங்கப்பட்டியில் இன்று தகனம்
அசாம் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கலிங்கப்பட்டியில் இன்று தகனம் செய்யப்படுகிறது. ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல் கூறினார்.
திருவேங்கடம்,
அசாம் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கலிங்கப்பட்டியில் இன்று தகனம் செய்யப்படுகிறது. ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல் கூறினார்.
ராணுவ வீரர் பலி
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திர தேவர்- ராஜேசுவரி தம்பதியின் மகன் செல்வகுமார் (வயது 36 ). இவர் அசாம் மாநிலம்- இடுலி மற்றும் கபாங் இடையேயான பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் பலியானார். இவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் செல்வகுமார் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. முன்னதாக அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் செல்வகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
வைகோ ஆறுதல்
இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வந்தார். அவர் பகல் 12 மணி அளவில் பலியான ராணுவ வீரர் வீட்டுக்கு தனது மனைவி ரேணுகாதேவியுடன் சென்றார். அங்கு செல்வகுமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்த செல்வகுமாருக்கு மரியசெல்வி என்ற கவிதா (33) என்ற மனைவியும், ராகுல் (10), பவித்ரா (8) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
செல்வகுமார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்த போதே ராணுவத்தில் வேலை கிடைத்தது. அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டுதான் ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 2001-ம் ஆண்டு 20-வது மதராஸ் ரெஜிமெண்டில் சிப்பாயாக பணியில் சேர்ந்தார். அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஹவில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு வேலை
செல்வகுமாரின் மனைவி மரியசெல்வி பி.எஸ்.சி., பி.எட் முடித்துள்ளார். எனவே எனவே அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பதவி உயர்வு கிடைத்த 10 நாளில் செல்வகுமார் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கலிங்கப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story