சென்னை காசிமேட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவொற்றியூர்,
சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜோசப் (வயது 54). இவர் தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்ல வேண்டியவர் செல்லவில்லை.
இதனால் அவரை தேடியபோது காலை வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது ‘சுவிட்ச்- ஆப்’ செய்யப்பட்டிருந்தது.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையம் பின்புறம் கருவாடு காயவைக்கும் இடத்தில் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்குபோட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காரணம் என்ன?
அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்துபோன ஜோசப்புக்கு சாந்தி என்ற மனைவியும், அனிதா, ஜென்சி என்ற 2 மகள்களும் உள்ளனர். ஜோசப்பின் சொந்தஊர் நெல்லை சமா தானபுரம் ஆகும்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜோசப் ஏற்கனவே காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். அதனால் அங்கு கருவாடு காயப்போடும் இடத்தில் இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இருக்காது என்பது தெரிந்து அங்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story