குடிநீர் ஆதாரமாக உள்ள மேல்கோடப்பமந்து தடுப்பணையில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


குடிநீர் ஆதாரமாக உள்ள மேல்கோடப்பமந்து தடுப்பணையில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் ஆதாரமாக உள்ள மேல் கோடப்பமந்து தடுப்பணையில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியின் 6-வது வார்டு மேல் கோடப்பமந்து பகுதியில் தடுப்பணை உள்ளது.

மழை பெய்யும் போது வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் மேல்கோடப்பமந்து தடுப்பணையில் சேகரமாகிறது. இந்த தண்ணீர் மேல்கோடப்பமந்து, ஆரணி ஹவுஸ், கீழ் கோடப்பமந்து, அம்பேத்கர்காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்குள்ள சிலர் தடுப்பணையை சுற்றி உள்ள வனப்பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன் படுத்தி வருகின்றனர். மேலும் தடுப்பணையில் கால்நடைகளை குளிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது. மேலும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தடுப்பணை தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

மேல்கோடப்பமந்து பகுதியில் 2 தடுப்பணைகள் உள்ளன. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை கொண்டு தான் ஊட்டி நகராட்சியில் 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய் யப்படுகிறது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த தடுப்பணைகள் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது. தடுப்பணைகள் தூர்வாரி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. மழையின் போது வனப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் மணல் மட்டுமின்றி கழிவுகள் தடுப்பணையில் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் ஆதாரமாக உள்ள தடுப்பணைகள் தற்போது சுகாதாரமற்ற நிலையில் காட்சி அளிக்கிறது.

தடுப்பணையில் உள்ள தண்ணீரில் சிலர் குளிப்பதாலும், கால்நடைகளை குளிப்பாட்டுவதாலும் தண் ணீர் மிகவும் மாசடைந்து உள்ளது. இந்த நீரை பொதுமக்கள் குடிப்பதால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்பட்டு மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த குடிநீரை பயன்படுத்தவே அச்சமாக உள்ளது.

எனவே, தடுப்பணையில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க அதை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story