டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசு இ-சேவை மையத்தில் ஆன்-லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், அரசு இ-சேவை மையத்தில் ஆன்-லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றுக்காக 2 அல்லது 3 முறை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. அதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ்களை சரிபார்க்க ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்களில் உரிய சான்றிதழ்களை ‘ஸ்கேன்’ செய்து ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக ஆன்-லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பெறலாம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், தங்களுடைய சான்றிதழ்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 12 தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் ‘ஸ்கேன்’ செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும்.
எனவே தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அரசு இ-சேவை மையத்தை அணுகி, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யலாம். இனி வரும் மற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சி அடைபவர்களும் இந்த முறையையே பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story