காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊர்வலம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அடுத்தமாதம் (மே) 3-ந் தேதிக்குள் மத்தியஅரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் கும்பகோணம்-நாகை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை பூங்கா எதிரே தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பனகல் கட்டிடம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில் சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி. துணை பொதுச் செயலாளர் சேகர், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் வைத்தியநாதன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் சோழபுரம் கலியன், முருகேசன், வடிவேல், சீனிவாசன், காளிமுத்து, பாலு, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்தமாதம் 3-ந் தேதிக்குள் மத்தியஅரசு அமைக்க தவறினால் அடுத்தகட்டமாக பணிமனையில் பஸ்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இனிமேலும் மத்தியஅரசு காலநீட்டிப்பு செய்யக்கூடாது.

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே கர்நாடகத்திடம் இருந்து காவிரி தண்ணீரை பெற தமிழகஅரசு முயற்சிக்க வேண்டும் என்றார். 

Next Story