அழிவுகளை வென்று காட்ட இளைஞர்களுக்கு அன்பு வழி தேவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு


அழிவுகளை வென்று காட்ட இளைஞர்களுக்கு அன்பு வழி தேவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

அழிவுகளை வென்று காட்ட இளைஞர்களுக்கு அன்பு வழி தேவை என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நேற்று சமூக பணித்துறை மற்றும் உள்தர உறுதிக்குழு இணைந்து நடத்திய அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம் பற்றிய சொற்பொழிவு நடைபெற்றது. துணைவேந்தர் மணிசங்கர் தலைமை தாங்கினார். இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அன்பு வழி

உலகம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அழிவுகளை வென்று காட்ட அன்பு வழி தேவை. அன்பு வழியை பின்பற்றி சரியான பாதையில் இளைஞர்கள் தங்களது பயணத்தை தொடங்க வேண்டும். கேளிக்கைகளிலும், வேடிக்கைகளிலும் காலத்தை களிப்பதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். இவற்றை எல்லாம் தாண்டி நமக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை உணரவேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் பிறருக்கு உதவ வேண்டும்.

சமத்துவம்

தகவல் தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே யாதும் ஊரே யாவரும் கேளர் என்ற வாசகத்தை உலகுக்கு எடுத்துரைத்தவன் தமிழன். என்னை அகிம்சை போராளியாக்கியவர்கள் தமிழர்கள் தான் என்று தேச பிதா மகாத்மா காந்தியடிகள் கூறி இருக்கிறார். உலகத்தில் பலர் ஒப்பற்ற சாதனைகளை படைத்து இருக்கலாம். ஆனால் அன்பு மூலமாக கற்று தந்தவர்கள் தமிழர்கள் தான். மாணவர்கள் கற்பது மட்டும் இன்றி கற்றலின் வழியில் நிற்கவும் வேண்டும். தமிழ் சமூகத்தில் சமத்துவத்தை போதிக்கும் எண்ணற்ற இலக்கியங்கள் இருக்கின்றன. யார் அமைதிக்கு உலை வைக்கிறார்களோ, யார் அதிகாரத்தின் உச்சத்துக்கு செல்கிறார்களோ அங்கு போர் நிகழும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story