சொகுசு பஸ் மீது லாரி மோதி டிரைவர் சாவு 12 பேர் படுகாயம்


சொகுசு பஸ் மீது லாரி மோதி டிரைவர் சாவு 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-25T02:10:28+05:30)

நாட்டறம்பள்ளி அருகே தனியார் சொகுசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டறம்பள்ளி,

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பைனபள்ளி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு, எதிரே வந்த சொகுசு பஸ் மீது மோதியது. இதில் லாரி மற்றும் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் ஆம்பூரை சேர்ந்த தீர்த்தகிரி (வயது 48) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பஸ்சில் பயணம் செய்த முனியம்மாள் (60), ஸ்டாலின் (29), வீராசாமி (38), இம்ரான்கான் (40), பாண்டி (22), அபிராமி (30), கிருஷ்ணபிரியா (30), தேவி (52), சத்யா (27) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிலர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story