தேவதானப்பட்டி அருகே பரபரப்பு பிணத்தை தெருவில் கொண்டு செல்ல எதிர்ப்பு; இருதரப்பினர் இடையே மோதல்
தேவதானப்பட்டி அருகே பிணத்தை தெருவில் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி உள்ளது. இந்த ஊரை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி வன்னியம்மாள் (வயது 56), நேற்று இறந்து விட்டார். இதையடுத்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது வன்னியம்மாளின் பிணத்தை தூக்கி கொண்டு, உறவினர்கள் மயானத்துக்கு புறப்பட்டனர். ஆனால், வழக்கமாக செல்லும் தெருவில் சமீபத்தில் ஒருவர் இறந்து, 16 நாட்கள் நிறைவடையவில்லை.
எனவே, மற்றொரு தெரு வழியாக வன்னியம்மாளின் உடலை கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு அந்த தெருவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதற்கிடையே ஒரு சிலர் மட்டும் பிணத்தை மயானத்துக்கு எடுத்து சென்று விட்டனர்.
இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது திடீரென சிலர் கற்களை எடுத்து வீசினர். இதனால் கல்வீச்சில் இருந்து தப்பிக்க சிலர் ஓட்டம் பிடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் சுப்புராஜ் (46), ரம்யா (19) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பொம்மிநாயக்கன்பட்டிக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Tags :
Next Story