கிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிப்பு


கிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிப்பு
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 24 April 2018 9:10 PM GMT)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டு போன மரங்களின் அடியில் உள்ள மண் சேகரிக்கப்பட்டு, அமிலம் ஊற்றப்பட்டு உள்ளதா? என்று ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விழா நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த கிரிவலப் பாதை பெரும்பாலும் வனப்பகுதியாக உள்ளது. மேலும் கிரிவலப் பாதையில் இருபுறமும் மரங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப் பாதையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது இடையூறாக உள்ள மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை அகற்றக்கூடாது என்று உத்தர விட்டது.

இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள பெரும்பாலான புளிய மரங்கள் காய்ந்து பட்டு போய் காணப்படுகிறது. இந்த மரங்களை சிலர் அமிலங்கள் ஊற்றி அழிக்க முயற்சி செய்வதாகவும், அமிலங்களின் பாதிப்பால் தான் மரங்கள் பட்டு போய் காணப்படுகின்றன என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கிரிவலப் பாதையில் பட்டுப் போன மரங்களின் அருகில் உள்ள மண்ணை எடுத்து சோதனை செய்து அமிலம் ஏதேனும் ஊற்றப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அவ்வாறு அமிலம் ஏதேனும் ஊற்றப்பட்டு இருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதைதொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிரிவலப் பாதையில் பட்டுபோன மரங்களின் அடியில் உள்ள மண்ணை சேகரித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சேகரித்த மண்ணை பரிசோதனை செய்ய வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு செய்யப்பட்ட பின்னரே முடிவு தெரியவரும்’ என்றனர்.

Next Story