காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்யவில்லை இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் நடிகர் அம்பரீஷ் அறிவிப்பு
காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்யவில்லை என்றும், இனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் நடிகர் அம்பரீஷ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்யவில்லை என்றும், இனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் நடிகர் அம்பரீஷ் அறிவித்துள்ளார்.
நடிகர் அம்பரீஷ்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதியில் அம்பரீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அம்பரீஷ் மனு தாக்கல் செய்யாமல் இருந்து வந்தார். சித்தராமையா தன்னை வந்து நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் சித்தராமையா அம்பரீசை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று அம்பரீஷ் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று அவர் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மண்டியா தொகுதி ரவிக்குமார் என்கிற கனிகா ரவி என்பவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. உடனடியாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். காங்கிரஸ் மேலிடம் மீது அம்பரீஷ் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிடவில்லை என்றும், இனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் அம்பரீஷ் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிடமாட்டேன்
எனக்கு உடல்நிலை சரி இல்லாததால் என்னால் சரியாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன். இதனால் மண்டியா தொகுதியில் நான் போட்டியிடவில்லை. அதேப் போல் இனிவருங்காலங்களிலும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடந்த 3 மாதங்களாக என்னை வேறு கட்சியினர் அழைத்தனர். ஆனால் நான் எங்கும் செல்லவில்லை.
இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவாகவும் செயல்படாமல் நடுநிலை வகிப்பேன். எனது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கேட்டால் அவரை நான் வெற்றி பெற வைக்க வேண்டும். நான் தொகுதியில் சுற்றி பிரசாரம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அவ்வாறு தொகுதியில் என்னால் நடமாட முடியும் என்றால், நானே தேர்தலில் நிற்கலாம் அல்லவா?.
எனது ஆதரவு உண்டு
இதனை தொடக்கத்திலேயே நான் கூறி இருக்கலாம் என்று சொல்கிறார்கள். வருணா தொகுதியில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அதனால் தான் நான் கடைசி நேரத்தில் எனது முடிவை அறிவித்து இருக்கிறேன். எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். மண்டியா தொகுதியில் யார் நின்றாலும் எனது ஆதரவு உண்டு. அனைவரிடமும் எனக்கு அன்பு, பாசம் உண்டு.
என்னுடன் கட்சியினர் அனைவரும் நல்லுறவில் தான் உள்ளனர். நான் தேர்தல் அரசியலில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறேன். ஆனால் வழக்கமான அரசியலில் தொடர்ந்து இருப்பேன். ஆதரவாளர்களுக்கு டிக்கெட் தருமாறு நான் கேட்கவில்லை. நான் 5 இடங்களை ஒதுக்குமாறும் கூறவில்லை. இது சுத்தமான பொய். எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறுவதற்கும், மற்றவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
மன வேதனை இல்லை
சித்தராமையா முதல்-மந்திரியாக நான் காரணம். எனக்கு வயதாகிவிட்டதாக கூறி மந்திரி பதவியை என்னிடம் இருந்து சித்தராமையா பறித்தார். இதனால் எனக்கு எந்த மன வேதனையும் இல்லை. ஆனால் என்னால் பிரசாரம் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி எனக்கு மத்திய மந்திரி, மாநில மந்திரி உள்பட அனைத்து பதவிகளையும் வழங்கியது. நாளுக்கு நாள் உடல் ரீதியாக எனது பலம் குறைந்து வருகிறது. அதனால் என்னால் சரிவர பணியாற்ற முடியவில்லை. காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்யவில்லை.
இவ்வாறு அம்பரீஷ் கூறினார்.
மண்டியா மாவட்ட காங்கிரசில் நடிகர் அம்பரீசுக்கும், நடிகை ரம்யாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதுவும் நடிகர் அம்பரீஷ் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என முடிவு எடுத்தற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. மண்டியா மாவட்ட காங்கிரசில் அம்பரீஷ் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Related Tags :
Next Story