பழனி அருகே தனியார் காகித ஆலையில் தீ
பழனி அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த ஆலையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி மோகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் காகித ஆலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின்பேரில், சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story