விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100 ஆசிரியர்கள் கைது


விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100 ஆசிரியர்கள் கைது
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து நேற்று விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்துக்கு பழைய கோர்ட்டு எதிர்புறம் உள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 24-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியை முற்றிலும் புறக்கணிப்போம் என்று ஜாக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர். இதையடுத்து ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் பள்ளி வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். 7-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குனரகங்களை ஒருங்கிணைத்து, மண்டல அளவில் இணை இயக்குனர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆதிசேசய்யா குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து, பழைய கோர்ட்டு முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையிலான போலீசார், அவர் களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக ஆசிரியர்கள் 30 பேரை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல ஒட்டன்சத்திரத்திலும் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பஸ் நிலையம் முன்பு ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 25 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story