கட்சிரோலியில் நடந்த அதிரடி தாக்குதல்களில் 37 நக்சலைட்டுகள் சாவு போலீசார் தகவல்


கட்சிரோலியில் நடந்த அதிரடி தாக்குதல்களில் 37 நக்சலைட்டுகள் சாவு போலீசார் தகவல்
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

கட்சிரோலியில் நடந்த அதிரடி தாக்குதல்களில் 37 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கட்சிரோலி, 

கட்சிரோலியில் நடந்த அதிரடி தாக்குதல்களில் 37 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

துப்பாக்கி சண்டை

கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த வனப்பகுதிகளில் சிறப்பு கமாண்டோ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கமாண்டோ போலீசார் மீது காட்டில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் போலீசாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நக்சலைட்டுகள் தப்பி ஓட்டம்பிடித்தனர். நக்சலைட்டுகள் தரப்பில் இருந்து அமைதி திரும்பிய நிலையில், போலீசார் அடர்ந்த காட்டுக்குள் சென்று தீவிர சோதனை போட்டனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு துளைத்து பல நக்சலைட்டுகள் பிணமாக கிடந்தனர். உடனடியாக 14 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் மேலும் 2 நக்சலைட்டுகளின் உடல் கிடைத்தது.

அடர்ந்த காட்டில் பெய்த மழை மற்றும் போலீஸ் பற்றாக்குறை காரணமாக உடல்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த காட்டுப்பகுதியில் பாயும் இந்திராவதி ஆற்றில் 15 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் பலியானது தெரியவந்தது.

மற்றொரு தாக்குதல்

இதற்கிடையே நேற்று முன்தினம் இதே கட்சிரோலி மாவட்டம் ராஜாராம் கண்ட்லா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 நக்சலைட்டுகள் பலியானார்கள். இதில் 4 பேர் பெண்கள் என தெரியவந்தது.

மராட்டியத்தில் போலீசார் நடத்திய இந்த இரு அதிரடி தாக்குதல்களிலும் மொத்தம் 37 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மராட்டிய மாநில போலீஸ் டி.ஜி.பி. சதீஷ் மாத்தூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடம் குறித்து எங்களுக்கு மிக தெளிவான ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி எங்களது போலீஸ் படையினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். கொல்லப்பட்டவர்களில் சாய்நாத் என்பவர் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்து வந்துள்ளார். இரும்பு தாதுக்களை ஏற்றி வந்த 75 லாரிகளை தீ வைத்து எரித்த வழக்கு இவர் மீது உள்ளது. அவரது தலைக்கு ரூ.18 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைய வேண்டும். இதை தவிர அவர்களுக்கு இனி வேறு வழியில்லை. தாமாக முன்வந்து சரண் அடையும் நக்சலைட்டுகளுக்கு திருந்தி வாழ அரசு உதவி வருகிறது. அவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஏற்றுக் கொண்டு நக்சலைட்டுகள் சரண் அடைய வேண்டும்.

மராட்டியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 605 நக்சலைட்டுகள் சரண் அடைந்து உள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.7 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சிரோலி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. அங்குஷ் ஷிண்டே கூறுகையில், ‘போலீஸ் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டு துணை கமாண்டர் ஸ்ரீகாந்த் (வயது 51) கொல்லப்பட்டு உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 82 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பெண் நக்சலைட்டு தீபா என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.47, எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன’ என்றார்.

ராஜ்நாத்சிங் பாராட்டு

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மராட்டிய மாநில டி.ஜி.பி. சதீஷ் மாத்தூரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நக்சலைட்டுகளுக்கு எதிராக மராட்டிய போலீசார் வெற்றிகரமாக நடத்திய தாக்குதலுக்கு தனது பாராட்டை தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார்.

Next Story