மணல்குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


மணல்குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மணல்குவாரி அமைக் கும் திட்டத்தை கைவிட கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக நெல்லிக்குப்பம் அருகே உள்ள வான்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் நின்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நீதிபதிகள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் தொடர்பான புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சட்ட விழிப்புணர்வு முகாம் முடிவடைந்த பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கலாம் என கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குறைகேட்பு கூட்டம் நடைபெற்ற அரங்கில் அமர்ந்திருந்தனர்.

பின்னர் சட்ட விழிப்புணர்வு முகாம் முடிவடைந்து நீதிபதிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், குறைகேட்பு கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த கிராம மக்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் உள்ள ‘ஹாலில்’ திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களில் முக்கிய நபர்கள் சிலரை கலெக்டரை சந்திக்க அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ள தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நாங்கள் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த நிலையில் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க போராட்டம் நடத்தியபோது அங்கு வந்த அதிகாரிகள் கலெக்டரை சந்தித்து தீர்வுகாணும்படி கூறினார்கள். அதன்பேரில் மனு கொடுக்க இங்கு வந்துள்ளோம். எனவே பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி வான்பாக்கம் பகுதியில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட்டு தடுப்பணை அமைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தண்டபாணி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story