கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், பிரதம மந்திரியின் நாடு தழுவிய சுகாதார பாதுகாப்பு திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவி கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாநில தலைவி பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய சுரக்‌ஷா மிஷன் என்ற திட்டத்தின் கணக்கெடுப்பு பணியால் வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே, அந்த கணக்கெடுப்பு பணியில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தலைவி கோவிந்தம்மாள் கூறியதாவது:-

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் அமல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் கிராம சுகாதார செவிலியர்கள் செய்து வருகிறார்கள். பொது சுகாதாரத்துறை பணிகள், தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட கூடுதல் பணிகளை கடும் சிரமத்தோடு செய்து வருகிறோம். இந்த நிலையில் பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்துக்கு கணக்கெடுப்பு பணியை கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்வதால் மேலும் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை அந்த கணக்கெடுக்கும் பணியை செய்ய நிர்ப்பந்திப்பதை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story