பாராளுமன்ற தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது - டி.டி.வி.தினகரன் பேட்டி


பாராளுமன்ற தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 1 May 2018 5:45 AM IST (Updated: 1 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது என்பதால் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

கோவை,

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று இரவு வந்தார். அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மதுசூதனன் ஆதரவாளர்கள். அவர்களது தோல்வியை மறைப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மதுசூதனன் ஆதரவாளர் என்பதற்கு என்னிடம் புகைப்பட ஆதாரம் உள்ளது. (அப்போது அவர் செல்போனில் அந்த புகைப்படத்தை காண்பித்தார்). அதை போலீசாரிடம் கொடுத்து உள்ளேன். இனி அவர்கள் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா அரசு, கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் (பாரதீய ஜனதா கட்சி) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. எனவே பாராளுமன்ற தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.

எனக்கு தங்கதமிழ்செல்வன் உள்பட யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. திவாகரன் போன்றவர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆந்திரா மாநிலத்தில் கிரண்குமார் ரெட்டி அரசியலில் இருந்து காணாமல் போனது போன்று தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காணாமல் போவார்கள்.

மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் இருந்து வழங்கப்படும் விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். தமிழகத்தையே, இந்திய வரைபடத்தில் இருந்து எடுத்து விட்ட அவர்கள் தமிழ்மொழியையா ஏற்றுக்கொள்ள போகின்றனர்.

கூட்டுறவு சங்க தேர்தல்களில் ஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இது குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இதில் சட்ட ரீதியாக போராடி வெல்வோம். 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story