குன்றக்குடியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


குன்றக்குடியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 1 May 2018 4:45 AM IST (Updated: 1 May 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 36). இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்ட பிரசார அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்கர் ஆன்மிக சுற்றுலாவாக வடமாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளார்.

இதனால் வீட்டில் அவருடைய குடும்பத்தினர், சகோதரர் பிரபாகரன் குடும்பத்தினர் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி மர்ம ஆசாமிகள் புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து, கதவு சேதமடைந்ததுடன் அருகில் கிடந்த துணிகள் எரிந்தன.

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு எழுந்த பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் பாஸ்கர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து குன்றக்குடி போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டுகள் வீசிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டதுடன், விசாரணை நடத்தினர். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஸ்கர் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து கேட்டார். 

Next Story