அரசு திட்டங்களை முடக்குவதாக புகார்: கவர்னரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அரசு திட்டங்களை முடக்குவதாக புகார்: கவர்னரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 5:00 AM IST (Updated: 1 May 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்களை முடக்குவதாக புகார் தெரிவித்து கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவையில் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,

புதுவை கவர்னராக கிரண்பெடி பதவியேற்ற நாள்முதல் அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், இலவச அரிசி திட்டத்தை முடக்கும் அவரது செயலை கண்டித்தும் கவர்னர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வடக்கு மாநில தி.மு.க.வினர் செஞ்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் புறப்பட்டனர். இதேபோல் தெற்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அதற்கு மேல் செல்லவிடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூடி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கவர்னர் கிரண்பெடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன், காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் வினாயகமூர்த்தி, நீல.கங்காதரன், பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு கீதநாதன், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், மாநில ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், தி.மு.க. நிர்வாகிகள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், சண்.குமாரவேல், ஜே.வி.எஸ். சரவணன், தைரியநாதன், சக்திவேல், முகமது யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அங்கு கூடியிருந்த தொண்டர்களில் சிலர்முற்றுகையிடும் விதமாக கவர்னர் மாளிகையை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் கொண்டுவந்து விட்டனர். 

Next Story