அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் கலெக்டர் தண்டபாணி பேச்சு


அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் கலெக்டர் தண்டபாணி பேச்சு
x
தினத்தந்தி 1 May 2018 11:59 PM IST (Updated: 2 May 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று மாளிகைமேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி பேசினார்.

கடலூர்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அண்ணாகிராமம் ஊராட்சிக்குட்பட்ட மாளிகைமேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சுசிலாஆனந்த், பிரபாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த கிராமசபை கூட்டத்தின் நோக்கம் கிராமத்தை மேலாய்வு செய்வதாகும். இந்தியாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (நேற்று) கிராமசபை கூட்டம் நடக்கிறது. தமிழக அரசு மருத்துவ சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம் தற்போது ஆயிஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 74 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கி தருவது தான் தமிழக அரசின் நோக்கம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். பொருளாதாரத்தில் அனைவரும் மேம்பாடு அடைய வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘எல்.இ.டி. பல்ப்’ பயன்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருக்கும் வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டி அதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமத்துக்கு தேவையான போக்குவரத்து மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மகளிருக்கு தையல் பயிற்சி அளித்து தையல் எந்திரம் வழங்கப்படும். மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டு அதில் 200 குடும்பங்களுக்கு ஒரு துணை நம்பிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதை நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Next Story