ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 2 May 2018 3:45 AM IST (Updated: 2 May 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 29 பேர் காயம் அடைந்தனர்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் புத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி விழா மேடை, வாடிவாசல், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க சேலம், மதுரை, திருச்சி, தேனி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. 400 மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் உடல் தகுதி ஆய்வு செய்யப்பட்டது.

இதை காண சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். காலை 9.30 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சினி முருகேசன், பாரதியார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மஞ்சினி ஏ.கே.ராமசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரஞ்சித், நரசிங்கபுரம் மணிவண்ணன், முரளிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கியதும் காளைகள் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கினார்கள். அதில் பல காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்தன. இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 29 பேர் காயம் அடைந்தனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் தாதர்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 32), மதுரை அவனியாபுரம் பாலா (18), ஆத்தூர் புங்கவாடி கிரீஷ்குமார் (32), உலிபுரம் இளவரசன் (22), கடம்பூர் பரமசிவம் (31), நாமக்கல் மாவட்டம் வேப்பிலைக் குட்டை சுரேஷ் (26), பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் தங்கராஜ் (26), கூடமலை ஜெயசீலன் (24), ஆத்தூர் அருகே கடம்பூர் கதிர் (22), ரமேஷ் (30), கொண்டயம்பள்ளி ரமேஷ் (26), காட்டுக்கோட்டை குமார் (45), தம்மம்பட்டி விஜயகுமார் (33), கடம்பூர் கலைநாதன் (40), கீரிப்பட்டி செந்தில் (43), நாமக்கல் மணிகண்டன் (17), சேலம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (10) உள்பட 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் தாதர் பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட 650 காளைகளில், மாலை 3.15 மணி வரை 550 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டு இருந்தன. 10 காளைகள் போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டது. மீதம் 90 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்து விட இருந்தநிலையில் வெயில் காரணமாகவும், வீரர்கள் சோர்வு அடைந்ததாலும் போட்டியை நிறுத்தும்படி போலீசார் கூறினர். இதையடுத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வருவாய்த்துறையினர் அங்கு வந்து சமரசப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story