குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு  பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2018 4:30 AM IST (Updated: 2 May 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் `கேட்டு கூழையன் காடு, புதுப்பட்டி, மழையூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கூழையன் காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் இங்குள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குடிநீர் செல்ல கூடிய ஒரு குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென காலிக் குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்மட்டம் குறைவு, மின்மோட்டார்கள் பழுதால் அடுத்தடுத்த நீர்த்தேக்கதொட்டிகள் செயல் படாமல் போனது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் புதுப்பட்டியில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மழையூரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி தாலுகா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் வறண்டு விட்டதால் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கறம்பக்குடி தாலுகா பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, குடிநீர் பிரச்சினையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story