‘மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றேன்’ கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்


‘மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றேன்’ கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 May 2018 4:00 AM IST (Updated: 2 May 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே புதுப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசினார், இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன், என்று கூறி உள்ளார்.

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாழக்குட்டப்பட்டி கிராமம் மூங்கிலேரி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும் மல்லூரை அடுத்த தேங்கல்பாளையத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி உமா மகேஸ்வரி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கி வந்தார். புதுமாப்பிள்ளையான தினேஷ்குமாரும் அவருடன் சென்று மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் மூங்கிலேரியில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் அருகில் இருந்த கொடுவாளை எடுத்து உமா மகேஸ்வரி கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் இதுகுறித்து தானே போலீசுக்கு போன் செய்து மனைவியை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு, வாழக்குட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மல்லூர் போலீசார், உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக தினேஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

உமா மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகு தனது தந்தை வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்கினார். மேலும் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்தார். இதனால் அவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு கேட்டேன். எனவே எங்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் ஆவேசத்தில் உமா மகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆன 3 மாதத்தில் புதுப்பெண்ணை கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story