குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் செய்தனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகே உள்ள மணியகாரன்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று பூத்தாம்பட்டியில் சீரான குடிநீர் வழங்கவேண்டும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேடசந்தூர்-வடமதுரை ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதித்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஒரு வாரத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story