பொங்கலூர் அருகே பரபரப்பு கிராம சபைக்கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்


பொங்கலூர் அருகே பரபரப்பு கிராம சபைக்கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 May 2018 5:00 AM IST (Updated: 2 May 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபைக்கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கலூர்

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் 16 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நேற்று மே தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. 15 ஊராட்சிகளில் சில பிரச்சினைகளை பொதுமக்கள் முன்வைத்து பேசினாலும் கிராம சபைக்கூட்டம் எந்தவித பிரச்சினையும் இன்றி முடிவுற்றது. ஆனால் பெருந்தொழுவு ஊராட்சியில் காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் அதிகாரிகள் 11.30 மணிக்குதான் வந்தனர். மேலும் கிராம சபைக்கூட்டத்திற்கு மிகவும் குறைவான பொதுமக்களே வந்திருந்தனர். வந்திருந்தவர்களும் தங்களுக்கு முறையாக கிராம சபைக்கூட்டம் நடத்த தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி ஊராட்சி செயலர் செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வந்திருந்தவர்கள் கிராம சபைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமராமல் புறக்கணித்து நின்றுகொண்டே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெருந்தொழுவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் ஒருவரின் 7 வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர். கந்தாம்பாளையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின்மோட்டார் பழுதாகி 6 மாதம் ஆகிறது. ஆனால் இன்றுவரை மின்மோட்டார் சரி செய்து பொருத்தப்பட வில்லை.

இதனால் நாங்கள் தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். தோட்டத்து பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். குடிநீர் விநியோகிப்பவர் இஷ்டம் போல் செயல்படுகிறார் என்று தெரிவித்தனர்.

அதுபோல் ராமலிங்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, எங்கள் ஊரில் ஆழ்குழாய் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றுக்கு இதுவரை மின் மோட்டார் பொருத்தப்பட வில்லை. பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. அத்திக்கடவு குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதுவும் ஒரு வீட்டிற்கு நான்கு குடம் மட்டுமே கிடைக்கிறது. இதை வைத்து நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

நொச்சிப்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியை ஒட்டி அதிக சக்தி கொண்ட மின்சார கம்பி செல்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். மணியம்பாளையத்தில் உள்ள நூலகம் கடந்த இரண்டு வருடங்களாக பூட்டியே கிடக்கிறது.

எனவே பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்தும் நாங்கள் அனைவரும் கிராம சபைக்கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி கிராம சபைக்கூட்டத்தை ஒத்தி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story